சோஷியல் மீடியாவில் குவியும் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்தபடி மீண்டும்….
கடந்த முப்பது வருடங்களாக ரசிகர்களின் மனதில் தனது யதார்த்தமான நகைச்சுவையாலும் என்றும் மறக்க முடியாத வசனங்களாலும், உடல்மொழியாலும் தனி இடம்பிடித்த நகைச்சுவை புயல் வடிவேலுவுக்கு இன்று 6௦வது பிறந்தநாள்.. சோஷியல் மீடியாவில் குவியும் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்தபடி மீண்டும் ஒருமுறை ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளார் நேசமணி சித்தப்பா வடிவேலு.
கடந்த பத்து வருடங்களாக சினிமாவில் ஆக்டிவாக இல்லை தான்.. ஆனால் சோஷியல் மீடியாக்களிலும், தொலைக்காட்சியில் இடைவிடாது ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும், இன்றும் அவர்தான் ராஜாவாக வலம் வருகிறார். கடந்த வருடம் திடீரென “நேசமணியை காப்பாற்றுங்கள்” என ட்ரெண்டிங்கில் வந்த வடிவேலு குறித்து, அவர் பாணியிலேயே சொல்வதென்றால் “எனக்கு என்னைக்குமே என்ட் கார்டு இல்லடா” என்பதைத்தான் நினைவூட்டியது.
இன்று மீம்ஸ் கிரியேட்டர்கள் மற்றும் ட்ரோல் வீடியோ உருவாக்குபவர்களின் கடவுளாகவே மாறிவிட்டார் வடிவேலு.. நான்கு படங்கள் சேர்ந்தாற்போல நடிக்காமல் விட்டாலோ, அல்லது சினிமாவில் ஒரு வருட இடைவெளி விட்டாலே கூட, அந்த கலைஞனை மக்கள் மறந்துவிடும் சூழலில், பத்து வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் (ஒதுக்கப்பட்ட) வடிவேலுவை ரசிகர்கள் ஒருபோதும் ஒதுக்கவே இல்லை என்பதுதான் ஆச்சர்யம்.
சமகால போட்டியாளர்களான விவேக்கும் வடிவேலும் சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் ஏமாற்றுக்களையும் தான் தங்களது நகைச்சுவைக்கான கருக்களாக எடுத்துக்கொண்டாலும், வடிவேலு அதை சிரிக்க சிரிக்க சொன்னவிதம் ரசிகர்களிடம் அதிகம் எடுபட்டது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையின் ஏதோ ஒரு நிகழ்வில் நாமும் வடிவேலுவாகத்தானே இருந்தோம் என எளிதாக வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அவ்வளவு ஏன், சின்ன குழந்தைகள் முதற்கொண்டு அவரது வசனங்களை பேசி தங்களையும் ஒரு ஜூனியர் வடிவேலுவாக உருமாற்றம் செய்துகொண்டார்கள்.
போட்டிக்கு பெரிய அளவில் ஆட்கள் இல்லாத நிலையில், வடிவேலுவின் திரையுலக வண்டி டாப் கியரில் சென்றுகொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக தனக்கான வனவாசத்தை வடிவேலு தானே தேடிக்கொண்டது தான் துரதிர்ஷ்டவசமானது.
எந்த ஒரு நகைச்சுவை நடிகரும் திடீரென ஹீரோவாக மாறும்போதும், அரசியல் சர்ச்சைகளில் தேவையில்லாமல் சிக்கும்போதும் அவர்களது திரையுலக வாழ்வில் ஏற்படும் சங்கடங்களுக்கும் சரிவுகளுக்கும் வடிவேலுவும் தப்பவில்லை.. ஆனாலும் சினிமாவை பொறுத்தவரை அவர் தானாக ஒதுங்கவில்லை.. ஒதுக்கப்பட்டார். அதேசமயம் அப்படி ஒதுக்கப்பட்டது நிச்சயம் மார்க்கெட் சரிவால் அல்ல என்பது மட்டும் உண்மை.
வருடத்துக்கு பத்து முதல் இருபது படங்களில் நடித்தது வந்த வடிவேலு, கடந்த பத்து வருடங்களில் வெறும் பத்து படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.. இந்த பத்துவருட காலத்தை .அவர் மட்டும் இழக்கவில்லை.. அவரது புத்துப்புது நகைச்சுவையை கண்டுகளிக்க முடியாத விதத்தில் ரசிகர்களுக்கும் அது பேரிழப்பு தான். ஆனால் வடிவேலுவுக்கான ஆட்ட களமும் அவரது நாற்காலியும் தமிழ் சினிமாவில் இன்றும் அப்படியே தான் இருக்கிறது.. அவர் களத்தில் இறங்கி ஆடவேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம்.. அதைத்தான் அவரது இன்றைய பிறந்தநாள் ட்ரெண்டிங்கும் உணர்த்துகிறது.