மக்கள் மீதான அராஜகத்தை உடனே தடுத்து நிறுத்துங்கள் – அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து.

“இனவாத அமைப்புக்கள், பொலிஸார், இராணுவத்தினர் ஆகிய தரப்பினர் மக்கள் மீது அரங்கேற்றும் அராஜகச் செயல்களைக் கைகட்டி வேடிக்கை பார்க்காதீர்கள். அவற்றை உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள்.”

இவ்வாறு அரசிடம் வலியுறுத்தியுள்ளார் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன்.

கொழும்பு – பொரளையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘கறுப்பு ஜூலை’ நினைவேந்தல் நிகழ்வைச் சிங்கள ராவய அமைப்பினர் மற்றும் பொலிஸார் – இராணுவத்தினர் இணைந்து குழப்பியிருந்தமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே இரா.சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இறந்தவர்களை நினைவேந்துவது ஒரு நாட்டினுடைய பிரஜையின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை எவரும் மீற முடியாது. அதை மீறுவது பெருந்தவறு. இப்படியான அத்துமீறல் செயலை நாம் அனைவரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இந்தச் செயலை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அராஜகச் செயலுக்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இனவாத அமைப்புக்கள், பொலிஸார், இராணுவத்தினர் ஆகிய தரப்பினர் மக்கள் மீது அரங்கேற்றும் அராஜகச் செயல்களை அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கக்கூடாது. அதை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். அதேசமயம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் எவரும் நடக்கக்கூடாது. சிலநேரங்களில் சிலர் குழப்பங்களை ஏற்படுத்துவதற்குக் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய சூழ்ச்சித் திட்டங்களுக்கு நாம் எவரும் பழிபோகக்கூடாது. அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

அஹிம்சைப் போராட்டங்கள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவது மக்களுடைய அடிப்படை உரிமை. அவற்றை மறுப்பது – தடுப்பது பிழை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.