அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுமா..?
மத்திய அரசுக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்கள் மக்களவையில் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் பாஜக கூட்டணிக்கு போதிய அளவில் எம்.பிக்கள் பலம் இருப்பதால் அந்த தீர்மானங்கள் தோற்கடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் வன்கொடுமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என நான்கு நாட்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நான்கு நாட்களும் இரு அவைகளும் முடங்கின. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது நம்பிக்கையில்லை என்று தெரிவிக்கும் தீர்மான நோட்டீசை மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகாய் நேற்று வழங்கினார்.
இதேபோன்று பாரத ராஷ்டிர சமிதி சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எந்த தேதியில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம், சபையில் ஏற்கப்பட்ட 10 நாட்களுக்குள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதால், விரைவில் இந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெற உள்ளது. 543 இடங்களை கொண்ட மக்களவையில் 5 இடங்கள் காலியாக உள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 334 எம்பிக்கள் உள்ளனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 கட்சிகளை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணிக்கு 147 எம்பிக்கள் மட்டும் உள்ளனர். பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 57 எம்பிக்கள் எந்த அணியும் சாராத நிலைப்பாட்டில் உள்ளனர். எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.