மணிப்பூர் வீடியோ விவகாரம் – சிபிஐ விசாரிக்க மத்திய அரசு உத்தரவு
மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தின் போது, கடந்த மே 4 ஆம் தேதி எடுக்கப்பட்ட வீடியோ, கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி உலகையே உலுக்கியது. அதில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இந்தநிலையில் மணிப்பூர் மாநில அரசுடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்திய சூழலில், இதுதொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.சர்ச்சைக்குரிய வீடியோ எடுத்த நபர் கண்டுபிடிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வழக்கை மணிப்பூருக்கு வெளியே விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.மணிப்பூர் கலவரங்கள் தொடர்பாக, ஏழாவது வழக்காக இதனை சிபிஐ விசாரிக்க உள்ளது.மேலும் குகி மற்றும் மெய்தி சமூக மக்களிடையே இதுவரை ஆறு கட்ட அமைதி பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
35,000 பாதுகாப்புப் படை வீரர்கள் மணிப்பூரில் குவிக்கப்பட்டுள்ளதாகவும், உணவுகள் மற்றும் மருந்துகள் தடையின்றி கிடைப்பதாகவும், மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் கூறப்படுகிறது.