ரஷ்யாவில் பற்றியெரிந்த ஹெலிகொப்டர் – 10 பேர் உடல் கருகி பலி.
ரஷ்யாவின் பெலுகா மலைப்பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. Mi-8 ஹெலிகொப்டரானது 13 பயணிகளுடன் பெலுகா மலைப்பகுதியில் சுற்றுலா சென்றுள்ளது.
தியுங்கூர் எனும் கிராமத்தில் தரையிறங்கும் நிலையில் அந்த Mi-8 ஹெலிகொப்டரானது மின் கம்பியில் உரசியதாகவும், இதனால், தீ பற்றியதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், தீயை அணைக்க போராடினர். ஆரம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறு பேர் என்று கருதப்பட்டது, ஆனால் அதன் பின்னர் மேலும் நான்கு இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. இதனிடையே, சிலர் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் நிலை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. அந்த ஹெலிகொப்டரில் பயணித்தவர்களில் 8 பேர் பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
13 சுற்றுலா பயணிகளுடன், 3 விமானிகளும் அந்த ஹெலிகொப்டரில் பயணித்துள்ளனர். தெற்கு சைபீரியாவின் Altai மலைப்பகுதியில் பெலுகா மலை மிக உயரமான சிகரம் என கூறுகின்றனர். இதன் உயரமானது 4,506 மீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.