நைஜர் நாட்டில் ராணுவ புரட்சி- ஆளுங்கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்த கும்பல்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு அதிபர் முகமது பாசும் தலைமையிலான அரசை கவிழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்களை துப்பாக்கி சூடு நடத்தி ராணுவம் விரட்டியடித்தது.
இந்த நிலையில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதரவாக உள்ளவர்கள், ஆளுங்கட்சியின் தலைமை அலுவலகத்தை நோக்கி கும்பலாக சென்றனர். அவர்களை பார்த்ததும் கட்சி அலுவலகத்தில் இருந்து தொண்டர்கள் அங்கிருந்து ஓடினர். பின்னர் அக்கும்பல் ஆளுங்கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்தது. இதையடுத்து அந்த கும்பலை கலைக்க போலீசார் புகை குண்டுகளை வீசினர்.
அந்த கும்பல் தீ வைத்ததில் ஆளுங்கட்சி அலுவலகம் கொழுந்துவிட்டு எரிந்தது. அங்கிருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.