கைவிலங்குடன் வைத்தியசாலையில் தரிந்து! – விசாரணையை ஆரம்பித்தது மனித உரிமை ஆணைக்குழு.

பொலிஸாரால் தாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவைப் பொரளை பொலிஸார் வைத்தியசாலையில் இன்று முற்பகல் சேர்த்துள்ளனர்.
வைத்தியசாலையிலும் கைவிலங்கிடப்பட்ட நிலையிலேயே தரிந்து இருக்கின்றார்.
“ஊடகவியலாளர் தரிந்து குற்றவாளி. அதனால், கைவிலங்கிட்டே வைத்திருப்போம்” – என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஊடகவியலாளர் தரிந்து உடுவகெதர பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இலங்கையின் பிரதான ஊடக அமைப்புகளான உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன இது தொடர்பில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளதோடு பொலிஸ்மா அதிபர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.