ஊடகவியலாளர் கைதுக்கு எதிராகப் பொரளையில் போராட்டம்!

இளம் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் கொழும்பு – பொரளையில் இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் பொரளை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது. இதில் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று (28) கொழும்பு, பொரளையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காணொளிகளைப் பதிவு செய்து கொண்டிருந்தபோதே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்படும்போது தரிந்து உடுவரகெதரவின் தலையில் பொலிஸார் தாக்கியுள்ளனர் என்று அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.