புதிய அரசமைப்பு தற்போது சாத்தியமில்லை! – 13 ஆவது திருத்தம் இறுதித் தீர்வுமில்லை என்கிறார் ரணில்.
தற்போதைய நிலைமையில் – இந்த அரசால் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தம் தொடர்பிலேயே தற்போது அதிகம் பேசப்படுகின்றது. அதுதான் இறுதித் தீர்வா என்று கொழும்பு ஊடகம் ஒன்று ஜனாதிபதி ரணிலிடம் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“13ஆம் திருத்தம்தான் இறுதித் தீர்வு என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சொல்லவில்லை. தற்போதைய நிலைமையில், இந்த ஆட்சியில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான சூழ்நிலை இல்லை. எனவே, இருக்கின்ற அரசமைப்பைக்கொண்டு, இருக்கின்ற அதிகாரங்களைக்கொண்டு தற்காலிகத் தீர்வை வழங்குவதே எனது நோக்கம். தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாக அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு நான் சம்மதம். ஆனால் இது தொடர்பில் நாடாளுமன்றமே இறுதி முடிவு எடுக்கும்.” – என்றார்.