மன்னித்துவிடு மகளே… சிறுமி சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் மன்னிப்புக் கோரிய பொலிசார்
இந்திய மாநிலம் கேரளாவில் புலம்பெயர் தொழிலாளி ஒருவரால் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, சீரழித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பொலிசார் தற்போது மன்னிப்புக் கோரியுள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் 5 வயது சிறுமி மாயமான நிலையில், குப்பை கொட்டும் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள விவகாரத்தில் தற்போது விசாரணை அதிகாரிகள் தரப்பு மன்னிப்புக் கோரியுள்ளனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவரால் தொடர்புடைய சிறுமி தனது குடியிருப்பில் இருந்தே கடத்தப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே கேரள பொலிசார், தங்கள் டுவிட்டர் பக்கத்தில், மன்னித்துவிடு மகளே என குறிப்பிட்டு, மன்னிப்புக் கோரியுள்ளனர். சிறுமியை உயிருடன் மீட்டு பெற்றோரிடம் கொண்டு சேர்க்க நாங்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
ஆனால், சிறுமியை கடத்திய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்திய பொலிசார், சனிக்கிழமை இரவு குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
ஆனால், அந்த நபர் மது அருந்திய நிலையில் காணப்பட்டதால், விசாரணை முன்னெடுப்பது தாமதமானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ஞாயிறன்று பகல், சிறுமியின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, எத்தனை முறை நாம் நமது மகள்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என எதிர்க் கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.