சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசிய கொடி ஏற்றுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியின் 103வது பதிப்பில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது பேசியவர், “ நாட்டின் பல்வேறு இடங்களில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தார். அந்த இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படை, ராணுவம் சிறப்பாக செயலாற்றியதாகவும், கூட்டு முயற்சியால் மீண்டு வந்துள்ளதாகவும் கூறினார்.
சுதந்திர தினத்துக்கு முன்பு “ என் தாய் என் தேசம்” என்ற மிகப்பெரிய பிரசாரம் தொடங்கப்படும் . நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் இப்பிரச்சாரம் நடத்தப்படும் என்றார். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று அனைவரும் ஒன்றுப்பட்டு வீடுதோறும் தேசிய கொடிகள் ஏற்றினீர்கள். அதுபோல் இந்த ஆண்டும் வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுங்கள். அதேபோல் அமுத கலச யாத்திரை நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் இருந்து மண், மரக்கன்றுகள் சேகரிக்கப்படும். அதனை கொண்டு வந்து போர்நினைவுச்சின்னம் அருகே அமுததோட்டம் உருவாக்கப்படும் என்றார்.
முதல் முறையாக ஆண்களின் துணையின்றி 4,000 இஸ்லாமிய பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் இருந்த கடத்தப்பட்ட கலைப்பொருட்களை அமெரிக்காவில் இருந்து மீட்டு வந்ததாக பிரதமர் கூறினார்.2016 – 2021 வரை மேற்கொண்ட அமெரிக்க பயணத்துக்கு இதுவும் ஒரு காரணம் என்றார். 250 முதல் 2,500 ஆண்டுகள் வரை பழமையான, கடத்தப்பட்ட சிலைகளை இந்தியாவிடம் அமெரிக்கா திருப்பி ஒப்படைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் 10,00,000 லட்சம் கிலோ எடையுள்ள, ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.