வடக்கு ரயில் சேவை மட்டுப்பாடுக்குக் காரணம் அரசியல் இல்லையாம்! – போக்குவரத்து அமைச்சர் பந்துல விளக்கம்.
“ரயில் பாதை புனரமைப்புக்கு முன்னர் வடக்குக்கு இடம்பெற்ற ரயில் சேவைகள் சில நிறுத்தப்பட்டுள்ளமைக்கு அரசியல் ரீதியான காரணம் எதுவுமில்லை. பழைய சேவைகளை நிறுத்தி புதிய சேவைகளை ஆரம்பித்துள்ளோம்.”
இவ்வாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார்.
ரயில் பாதை புனரமைப்புக்கு முன்னர் கல்கிஸையிலிருந்து தினமும் காலை 5.15 புறப்படும் கடுகதி ரயில் (4021) தற்போது சனிக்கிழமைகளில் மாத்திரம் அதே நேரத்தில் சேவையில் ஈடுபடுகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து 13.40 இற்குப் புறப்படும் கடுகதி ரயில் (4022) தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது. முன்னர் இயக்கப்பட்ட சிறிதேவி ரயில் சேவையில் ஈடுபடவில்லை. வார நாட்களில் சேவையில் ஈடுபட்ட கடுகதி ரயில் (4003,4004) இப்போது சேவையில் ஈடுபடவில்லை. வார இறுதி நாள்களில் இரவு 10 மணிக்கு இடம்பெற்ற ரயில் சேவையும் (4091,4092) தற்போது இடம்பெறுவதில்லை. இந்தச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளமையால் வடக்கைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துலவிடம் கேட்டபோது,
“பல மாதங்களுக்குப் பின்னர் கொழும்பிலிருந்து வடக்குக்கான ரயில் சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளது. கல்கிஸை மற்றும் கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கான ரயில் சேவைகள் நாள்தோறும் சீரான முறையில் இயங்கவேண்டும். அதற்காக பழைய சேவைகளில் சில மட்டுப்படுத்தப்பட்டும் மக்களின் நன்மை கருதி சில புதிய சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பழைய சேவைகள் சீராக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்காமல் ரயில் சேவைகள் முழுமையாக இயங்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். இனிவரும் காலங்களில் பழைய சேவைகளையும் முழுமைப்படுத்தி புதிய சேவைகளையும் முழுமைப்படுத்தி வடக்கு ரயில் மார்க்கத்தில் புதிய அத்தியாயம் தொடங்கும். பழைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டமைக்கு எந்தவித அரசியலும் இல்லை” – என்று பதிலளித்தார்.