ரணிலின் டில்லிப் பயணம்: இந்திய முதலீட்டாளர்கள் வடக்குக்குப் படையெடுப்பு!
இந்திய முதலீட்டாளர் குழுவொன்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சார்ள்ஸ் மற்றும் மாகாண அரச அதிகாரிகளைச் சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தால் இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட புவியியல் மற்றும் வர்த்தக இணைப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்களுக்கு அமைவாக, இந்திய தொழில்கள் கூட்டமைப்பு மற்றும் விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையின் பலதுறை பிரதிநிதிகள், மரபுசார் போன்ற துறைகளில் நிபுணர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களை உள்ளடக்கிய குழுவே வருகை தந்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தளபாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு கப்பல் போக்குவரத்து, நீர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகியனவற்றில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இந்தக் குழு ஆராய்ந்துள்ளது.
இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடனான நெருக்கமான ஒத்துழைப்பு இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாக மீள உதவும் அதேவேளையில் பகிரப்பட்ட செழிப்பை உறுதி செய்யும் என ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் குறிப்பிட்டார்.
கைத்தொழில், நகர அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டு சபை, கூட்டுறவு, பாற் பண்ணை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
வடக்கு மாகாணத்துக்கான தமது 3 நாள் பயணத்தின் போது சம்பந்தப்பட்ட முதலீட்டுத் தளங்களையும் பார்வையிடும் அதேவேளை, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்களைச் சந்திப்பதற்கும் தூதுக்குழு திட்டமிட்டுள்ளது.