நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்… பதிலளிக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடியின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வரும் 8, 9 ஆகிய தேதிகளில் மக்களவையில் விவாதம் நடத்தப்பட இருக்கிறது.
மணிப்பூரில் மே முதல் வாரத்தில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி சார்பிலும், பிஆர்எஸ் கட்சி சார்பிலும் இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டன. மணிப்பூர் விவகாரத்தை சுட்டிக்காட்டி கடந்த 26ஆம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மக்களவை அலுவல் விதி 198இன் கீழ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. 50 எம்பிகளுக்கும் அதிகமானோர் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளதை அடுத்து தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து மக்களவைக்கு வந்து பிரதமர் மோடி விளக்கமளிக்க இந்தியா கூட்டணியினர் வலியுறுத்தி வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்த சூழலில் மக்களவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
மக்களவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் வரும் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் விவாதம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. வரும் 10ஆம் தேதி இந்த விவாதம் குறித்து பிரதமர் மோடி பதில் அளிப்பார் என்றும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.