வவுனியாவில் நடந்த இரட்டைக் கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது!
வவுனியா தோணிக்கல் பகுதியில் கடந்த 23ஆம் திகதி பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்து இரட்டைக் கொலைகளை செய்து, வீட்டிற்கு தீ வைத்து 05 சிறுவர்கள் உட்பட 09 பேரை படுகாயப்படுத்திய கொடூர குற்றவாளிகள் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவினால் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்ய கிடைத்த உத்தரவின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன், தாக்குதலுக்கு வந்ததாக கருதப்படும் 3 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வவுனியா மதவைத்தகுளம், பாம்பைமடு, சிவபுரம் மற்றும் நெலும்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே சந்தேக நபர்கள் என கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த 24, 27, 31 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குற்றச்செயல் ஆரம்பத்தில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் என பேசப்பட்டாலும் , அது போதைப்பொருள் கடத்தல் அல்ல என்றும், பெண் தொடர்பு விவகாரம் ஒன்று மோதலாக மாறியதையடுத்து , கொடுக்கப்பட்ட கொலை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த நடந்த கொலைகளே என இரகசிய பொலிஸ் புலனாய்வாளர்கள் தற்போது வெளிப்படுத்தியுள்ளனர்.
இத்தாக்குதலின் பின்னர் கொல்லப்பட்ட இளைஞன் தனது காதலியுடன் வாழ்ந்து வரும் அதே நேரம் , இன்னொரு பெண் கிராம சேவையாளர் ஒருவருடனும் தொடர்பு வைத்திருந்ததாகவும், பெண் கிராம சேவையாளருடன் தொடர்பில் இருந்த மற்றுமொரு நபரே இந்த இளைஞனை கொலை செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாகவும் விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த இளைஞரைக் கொல்லும் நோக்கில், பிறந்தநாள் விழா நடைபெற்ற சுரேஷ் என்பவரின் வீட்டுக்குள் கொலையாளிகள் புகுந்தது தற்போது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பெண் முதலில் கொலையாளிகள் வருவதைக் கண்டு பயந்து அலறியதால் , அவரது கூச்சலை தடுக்க கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்தாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கொலையாளிகளின் இலக்காக இருந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.