எரிகிறதே மணிப்பூர் : அணைப்பது யார்?
இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடி மக்களுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்றுவரும் வன்முறைகள் உலகின் மனச்சாட்சியை உலுக்கியுள்ளன.
இரண்டு குக்கி இனப் பெண்கள் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு வீதியிலே இழுத்துச் செல்லப்படும் காணொளி வெளியாகிய நிலையில் முதல் தடவையாக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வாய் திறக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி உள்ளார்.
குறித்த சம்பவத்துக்கு உள்நாட்டில் இருந்து மாத்திரமன்றி உலக நாடுகளிலும், உலகப் பொதுமன்றங்களிலும் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கின்றோம் என்ற போர்வையில் ஒருசில கைதுகள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சற்றொப்ப மூன்று மாதங்களாக இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வன்முறைகள் தொடர்பில் முழுமையான தகவல்களைப் பெற்றுக் கொள்வது சிரமமாக மாறியுள்ளது. என்றாலும் தினமும் ஏதாவது புதுப்புதுத் தகவல்கள் வந்த வண்ணமேயே உள்ளன.
கொலை, பாலியல் வல்லுறவு, வாழிடங்கள் சூறையாடல், தீ வைப்பு, தேவாலயங்கள் இடித்தழிப்பு, கல்லறைகள் சிதைப்பு எனக் கொடூரமான செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்ற போதிலும் அவை ஆட்சியாளர்களின் மனச்சாட்சியை உலுக்கியதாகத் தெரியவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் பாரதீய ஜனதாக் கட்சியே ஆட்சியில் உள்ள போதிலும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலத்துக்கு வருகை தந்து சென்ற பின்னரும் கலவர நிலை தணிந்ததாகத் தெரியவில்லை. மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறையினரே கலவரக்காரர்களுக்கு உடந்தையாகவும் அனுசரணையாகவும் செயல்படுவதாக வெளிவரும் செய்திகள் ஆட்சியாளர்களின் எண்ணவோட்டத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளன.
ஒற்றை இந்தியா, ஒற்றை மதம், ஒற்றை வழிபாடு, ஒற்றை உணவு எனப் பன்முகத்தன்மையை மறுதலிக்கும் இந்துத்துவவாதிகளின் கொள்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த தன்னாலான அனைத்தையும் செய்துவரும் மோடி தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற நாள்முதலாகவே சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றமை ஒன்றும் இரகசியமான விடயமல்ல.
2002ஆம் ஆண்டில் குஜாரத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரத்தில் அன்றைய குஜாரத் முதலமைச்சரும் இன்றைய தலைமை அமைச்சருமான நரேந்திர மோடி அவரது அன்றைய அமைச்சரவைச் சகாவான அமித் ஷா ஆகியோர் கொண்டிருந்த வகிபாகம் உலகம் அறிந்த விடயம். குஜாரத் விவகாரம் உலக மன்றங்களில் விவாதிக்கப்பட்டு அதற்கெதிரான கண்டனங்கள் அதிகளவில் வெளியாகிய பின்னரும் கூட சிறுபான்மை மக்களுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை, மாற்றிக் கொள்ளத் தயாராகவும் இல்லை என்பதை தற்போதைய மணிப்பூர் சம்பவங்கள் பறைசாற்றி நிற்கின்றன.
மணிப்பூர் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும், அதில் தலைமை அமைச்சர் மோடி நேரில் வந்து கருத்துத் தெரிவிக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கையை அவர் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றார். உலகில் ஊடகர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவரும் ஒரேயொரு அரசியல் தலைவரான அவர் மணிப்பூர் விவகாரம் தொடர்பில் நடத்திய ஊடகர் சந்திப்பு 38 விநாடிகள் மாத்திரமே நீடித்திருக்கின்றது. இதில் கூட அவர் ஒரு உலக சாதனையை நிகழ்த்தி இருக்கின்றார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பில் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விவாதத்துக்குச் செல்லவும், ஊடகவியலாளர்களைச் சந்திக்கவும் அவர் தயங்குகிறார் என்றால் அதன் அர்த்தம் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை. அது மாத்திரமன்றி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதிலும் அவர் பின்னடித்து வருகிறார். சிலவேளை மணிப்பூரில் அவர் ஆதரித்து நிற்கும் இந்துத்துவவாதிகளின் ‘இலக்கு’ எட்டப்படும் வரை அவர் அங்கு செல்வதைத் தவிர்த்து வருகின்றாரோ என்னவோ?
உண்மையில் மணிப்பூரில் என்னதான் பிரச்சனை?
பெருமளவு மலைகளைக் கொண்ட மணிப்பூரில் 10 விழுக்காடு மாத்திரமே சமவெளியாக உள்ளது. இந்தப் பத்து சதவீத நிலப்பிரப்பில் அம்மாநிலத்தின் 53 விழுக்காடு மக்கள் தொகையைக் கொண்ட மைத்தி இன மக்கள் வாழ்கிறார்கள் மீதி உள்ள 90 விழுக்காடு மலைப்பகுதியில் குக்கி, நாகா, சோமி உள்ளிட்ட பழங்குடி இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். பள்ளத்தாக்கில் வாழும் மைத்தி இன மக்கள் பெரும்பாலும் இந்துக்களாகவும் மலைப்பகுதியில் வாழ்வோர் பெரும்பாலும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் ஏனையோர் நிலங்களை வாங்குவது அரசியலமைப்பின் பிரகாரம் தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கில் உள்ள நிலங்கள் தங்களுக்குப் போதாது எனவே தாங்கள் மலைப்பகுதியில் நிலங்களை வாங்குவதற்கு ஏதுவாக தங்களையும் பழங்குடிகள் என அறிவிக்க வேண்டும் என 2013இல் மைத்தி இன மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகளின் பின்னர் கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி மணிப்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பே தற்போதைய கலவரத்தின் பொறியாக மாறியது. வழக்கு தொடர்பில் தங்கள் கருத்தை மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தினுள் தெரிவிக்க வேண்டும் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவிக்கும் வகையில் மணிப்பூரின் அனைத்துப் பழங்குடி மாணவர் சங்கம் ஏப்ரல் 23ஆம் திகதி மலைப்பகுதிகளில் 12 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மணிப்பூரின் தலைநகர் இம்பால் உட்பட 10 இடங்களில் பேரணி நடத்தப்பட்டது. 60,000 பேர் வரை கலந்து கொண்ட இந்தப் பேரணியில்தான் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ‘மைத்தி இனப் பெண் ஒருவரை குக்கி பழங்குடிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டனர்’ என்ற போலியான செய்தி ஒன்று பரப்பப்பட்டு வன்முறைக்கு வித்திடப்பட்டது.
அது பற்ற வைத்த நெருப்பில் இதுவரை 150க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அன்று பற்றிய தீயில் இன்றுவரை மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கின்றது. இந்தத் தீயை அணைக்கக் கூடிய நிலையில் உள்ள மாநில முதல்வரோ “குக்கி இனப் பெண்கள் நிர்வாணமாக நடத்திச் செல்லப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படும் காணொளி போன்று பல காணொளிகள் உள்ளன” எனக் கூறி விடயத்தைச் சாதாரணமாகக் கடந்து செல்ல விரும்புகிறார். உலகமெலாம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் தலைமை அமைச்சர் மோடி மணிப்பூர் செல்ல மனமின்றி இருக்கிறார். எதிர்க் கட்சித் தலைவர்கள் கூட மணிப்பூர் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
மணிப்பூர் பற்றி எரிவதை மாநிலத்திலும், மத்தியிலும் உள்ள அரசாங்கங்கள் கண்டு கொள்ளாத போதிலும் எதிர்க் கட்சிகள் இந்த விவகாரத்தை விட்டுவிடுவதாக இல்லை. அவை பல போராட்டங்களை நாடெங்கிலும் நடத்தி வருகின்றன. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பித்துள்ளன.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கூட மணிப்பூர் விவகாரம் விவாதிக்கப்பட்டாகி விட்டது. இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட அதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகின்றது என்றால் மணிப்பூர் இந்தியாவில் தான் இருக்கிறதா? அவ்வாறு இருந்தால் அது தொடர்ந்தும் இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்துதான் ஆகவேண்டுமா என்ற கேள்விகள் எழுவது நியாயமே?