நாட்டை மீட்டெடுத்து வரும் ரணிலை நிராகரிக்க முடியாது! – பந்துல கருத்து.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவாராயின் அவரை நிராகரிப்பதற்குக் காரணங்கள் எதுவும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆனால், ஆளுங்கட்சியில் உள்ள ஒரு சிலர் முந்திக்கொண்டு மேடைகளில் ஏறி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவாராயின் அவரை நிராகரிப்பதற்குக் காரணங்கள் எதுவும் இல்லை.
வீழ்ச்சியடைந்த எமது நாட்டை மீட்டெடுத்து வரும் ஒரு தலைவராக அவர் விளங்குகின்றார். இந்தநிலையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் யார் வேட்பாளர் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிக்கும். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும்.” – என்றார்.