இரு மாணவ குழுக்களுக்கிடையே மோதலால் மாணவன் ஒருவர் காயம்.

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற க.பொ. த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற செயலமர்வின் போது மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் கூட்டுறவாளர் மண்டபம் கலவர பூமியாக மாறியதோடு, அடிதடியில் ஈடுப்பட்ட மாணவன் ஒருவனின் கழுத்தும் வெட்டப்பட்டுள்ளதோடு, 20 க்கு மேற்பட்ட கதிரைகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 2600 வரையான மாணவர்கள் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்திற்கு செயலமர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

மண்டபத்திற்குள் சுமார் 1200 மாணவர்கள் மாத்திரமே அமர்ந்திருக்க முடியும் இதனால் ஆரம்பத்திலேயே சில மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்படத் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் மாணவர்கள் சிலர் அடிதடியில் ஈடுப்பட்டனர். கதிரைகளால் தாக்கிகொண்டனர். பின்னர் மண்டப வளாகத்திலிருந்து வெளியேறிய மாணவர்கள் வீதியிலும் மோதிக்கொண்டனர்.

கையில் பொல்லுகளுடன் சில மாணவர்கள் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது ஒரு மாணவனின் கழுத்து சிறிய கத்தி ஒன்றினால் வெட்டுப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெட்டுக் காயங்களுக்குள்ளான மாணவன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.

இந்த மோதல் சம்பவத்திற்கு நிகழ்வு ஏற்பாட்டுக் குறைபாடும் இதற்கு காரணம் என பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.