“13” தொடர்பில் 15 இல் மீண்டும் சர்வகட்சி மாநாடு!

மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மீண்டும் கூடவுள்ளது. அதற்கான அழைப்பு சர்வகட்சிகளுக்கும் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி மாநாடு நடத்தப்படவுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின்போது அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்கும் வகையில் ஜனாதிபதி அதிகாரத்தை வழங்கியிருந்தார். அதற்கேற்ப கட்சித் தலைவர்கள் அவர்களது யோசனையைச் சமர்ப்பிப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி சர்வகட்சி மாநாடு மீண்டும் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி 13 ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனையைப் பெற முன் மொட்டுவின் ஆதரவைப் பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
13 ஆவது திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் இணக்கம் இல்லை என்றும், ஜனாதிபதி மொட்டுவின் உறுதியான நிலைப்பாட்டை அறிவித்த பின் ஐக்கிய மக்கள் சக்தி தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.