உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல்!
மோடி சமூக பெயர் தொடர்பான வழக்கில் தான் குற்றமற்றவர் என்றும், தன்னை நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ம் ஆண்டு மோடி சமூகத்தவர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் தனது வயநாடு மக்களவை தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி இழந்தார். தீர்ப்புக்கு எதிரான ராகுல் காந்தியின் மனுக்களை குஜராத் அமர்வு நீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த ராகுல் காந்தி, இந்த வழக்கில் தான் குற்றமற்றவன் என்று கூறியுள்ளார். மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தனக்கு அளித்த தண்டனை நிலைக்கத் தக்கதல்ல என்றும், வருத்தம் தெரிவிக்க சொல்லியிருந்தால் அதை முன்பே செய்திருப்பேன் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.