ஹரியாணாவில் மதக் கலவரம்: மேலும் ஒரு மசூதிக்கு தீ வைத்து எரிப்பு!
ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் மேலும் ஒரு மசூதிக்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நூஹ் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இரண்டு மசூதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் ஒன்று விஜய் சௌக் அருகிலும், மற்றொன்று காவல் நிலையத்திற்கு அருகிலும் உள்ளது. இரண்டு மசூதிகளும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் வருண் சிங்லா கூறுகையில்,
ஒரு மசூதியில் லேசான தீ வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு மசூதியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போலீஸார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து மர்ம நபர்களை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், இரண்டு பள்ளி வாசல்களுக்கும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
அருகில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றது.
நூஹ் பகுதியில் இன்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருள்களை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வாங்கலாம் என துணை ஆணையர் பிரசாந்த் பன்வார் கூறியுள்ளார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலத்தை ஒரு கும்பல் தடுக்க முயன்றதை அடுத்து, திங்களன்று வகுப்புவாத வன்முறை வெடித்ததை அடுத்து, நுஹ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த திங்களன்று ஏற்பட்ட மதக் கலவரத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக 116 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.