வகுப்பறையில் குடையுடன் அமரும் மாணவர்கள்!
மத்தியப் பிரதேசத்திலுள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் குடையுடன் அமர்ந்து படிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்திலுள்ள புர்ஷி அரசுப் பள்ளியில் அதிக அளவிலான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் பெருமாலானோர் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அரசுப் பள்ளியின் மேற்கூரை கசிந்து வகுப்பறையில் நீர் சொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
வகுப்பறையிலிருந்த மாணவர்களில் ஓரிருவர் கொண்டுவந்த குடையை வைத்துக்கொண்டு, வகுப்பறையிலிருந்த மாணவர்கள் அனைவரும் குடைபிடித்தவாறு பாடத்தை கவனித்தனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டது. இது தொடர்பாக பேசிய ஷாதோல் மாவட்ட ஆட்சியர் வந்தனா, சம்பந்தப்பட்ட பள்ளி விரைவில் சீரமைக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளை சீரமைப்பதற்கான செலவு குறித்து எழுத்துப்பூர்வ அறிக்கை கேட்டுள்ளோம். இதனால், சேதமடைந்த பள்ளிகள் அனைத்தும் விரைவில் சீரமைக்கப்படும். மேலும், மழைக்காலங்களில் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் இதுபோன்ற இன்னல்களை சந்திப்பதை தவிர்க்க முடியும் எனக் குறிப்பிட்டார்.