இந்தியா பெயரை பயன்படுத்த எதிர்ப்பு: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வரும் நாடாளுமன்ற மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியை எதிா்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, ‘இந்தியா’ (இந்திய தேசிய வளா்ச்சிக் கூட்டணி) என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. மத்திய அரசுக்கு எதிராக இந்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்ற பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா மற்றும் அமித் மகாஜன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
கூட்டணிக்கு ‘இந்தியா’ என்ற பெயரை வைத்துள்ளது, அப்பாவி மக்களின் அனுதாபத்தையும் வாக்குகளையும் பெறுவதற்கும் அரசியல் ஆதாயத்திற்கான கருவியாக பயன்படுத்துவதற்குமே என்பதால் இதனைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு கூறியது.
இந்த வழக்கில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி விளக்கமளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்திவைத்தது.