சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணத்தில் பயங்கர வன்முறை: போலீஸ் தடியடி
ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணத்தில் பயங்கர வன்முறை வெடித்தது.
ஆந்திர அரசின் நீர் மேலாண்மை திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சந்திரபாபு நாயுடு பயணத்தை தடுத்து நிறுத்துவோம் என்று ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று திட்டமிட்டபடி சந்திரபாபு நாயுடு புங்கனூர் பகுதிக்கு வந்து சேர்ந்தார். குறபலக்கோட்டா அருகே உள்ள சந்திப்பு ஒன்றில் சந்திரபாபு நாயுடுவின் கான்வாயை தடுத்து நிறுத்த ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் பெரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் அந்த இடத்தில் தெலுங்கு தேசம் கட்சியினரும் குவிந்து இரண்டு கட்சி தொண்டர்களும் ஒருவரை ஒருவர் கற்கள், செருப்பு,சோடா பாட்டில், பீர் பாட்டில் ஆகியவற்றால் தாக்கி கொண்டனர். இரண்டு கட்சி தொண்டர்களையும் விரட்டியடிக்க போலீசார் தடியடி மேற்கொண்டனர். போலீசார் நடத்திய தடியடியில் இரண்டு கட்சிகளையும் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில் ஆவேசமடைந்த கட்சி தொண்டர்கள் காவல்துறையின் இரண்டு வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த நிலையில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்ட கட்சித் தொண்டர்களை விரட்டியடித்தனர்.
இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில நீர்வள துறை அமைச்சர் பெத்திரொட்டி ராமச்சந்திரா ரெட்டிக்கு சவால் விடுக்கும் வகையில் தன்னுடைய பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு பேசினார்.