வீட்டு கிணற்றில் தண்ணீருக்கு பதில் ஊற்றெடுத்து வரும் பெட்ரோல்… ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!
திருவனந்தபுரம் அருகே வீடுகளில் உள்ள கிணறுகளில் தண்ணீருக்குப் பதில் பெட்ரோல் ஊற்றெடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாறுமூடு ஆலந்தற பகுதியில் உள்ள ஆறு வீடுகளில் கிணற்று நீர் வித்தியாசமான சுவையுடன் இருந்து வருகிறது. இதனால், அந்த தண்ணீரை பயன்படுத்துவதை அப்பகுதியில் உள்ளவர்கள் தவிர்த்தனர்.
இதையடுத்து, வீட்டு உபயோகத்திற்கு குழாய் நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியில் சுகுமாரன் என்பவரின் வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றெடுத்து வருகிறது. மேலும், இவரின் வீட்டின் எதிர்புறம் 300 மீட்டர் தொலைவில் பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது. இதனால், அங்குள்ள சேமிப்பு கிடங்கில் கசிவு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு வந்த பெட்ரோல் நிலைய நிர்வாகிகள் அந்த கிணற்றை மூடியுள்ளனர். அத்துடன் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றில் தண்ணீருக்குப் பதில் பெட்ரோல் வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.