17,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கிய இந்திய நிறுவனங்கள்…!
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் startup நிறுவனங்களின் எண்ணிக்கையானது மிகப்பெரும் அளவில் அதிகரித்து வந்தது. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று மற்றும் உலக அளவில் நிலவும் அசாதாரணமான அரசியல் சூழலினால் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. நிதி நிலைமையை சமாளிப்பதற்காக இவ்வாறு பணி நீக்கம் செய்யப்படுவதாக அவர்களின் தரப்பில் கூறப்படுகிறது.
இவ்வாறு பணி நீக்கம் செய்யப்படும் நிறுவனங்கள் வரிசையில் இந்தியாவில் உள்ள startup நிறுவனங்கள் இணைந்துள்ளன. 2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துவக்க நிலை பணியிடங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எக்கனாமிக் டைம்ஸ் அறிக்கையின் படி தற்போது இருக்கும் ஆள் சேர்ப்பு நிறுவனங்கள் மற்றும் துவக்க நிலை நிறுவனங்கள் பலவும் பெரும்பாலும் வெளியில் இருந்து முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை நம்பியே செயல்படுகின்றன.
தற்போது உலக அளவில் நிகழ்ந்து வரும் அசாதாரண சூழ்நிலையினால் பல்வேறு நிறுவனங்களின் முதலீட்டாளர்களும் தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனங்களின் நிதி நிலைமையை சமாளிப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளும்படி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதன் விளைவாக பெரும் அளவிலான startup company நிறுவனங்கள் கடந்த அரையாண்டில் மட்டும் 70 சதவீதத்திற்கும் அதிகமான பணியிடங்களை மூடிவிட்டனர்.
இ-காமர்ஸ், ஃபின்டெக், லாஜிஸ்டிக்ஸ், ஹெல்த்கேர் போன்ற அனைத்து துறைகளிலும் ஆட்குறைப்பு நடவடிக்கை ஆனது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றைத் தவிர பெரும் யூனிகார்ன் நிறுவனங்களாகிய பைஜூஸ், மீஷோ, அன் அகாடமி ஸ்விக்கி, ஷேர்சாட் போன்ற நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையானது பெருமளவில் குறைந்து வருவதால் startup நிறுவனங்கள் பலவும் இப்படிப்பட்ட ஒரு சவாலை சந்தித்து வருகின்றன. இப்போதைக்க இந்த நிறுவனங்கள் லாபம் ஈட்டும் நோக்கத்தை விட தங்களது தரப்பில் ஏற்படும் செலவுகளை குறைப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன. அதன் காரணமாகவே முடிந்த அளவு ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நிதி நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்கின்றன.
கிடைத்துள்ள தரவின்படி startup நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடானது கடந்த வருடத்தில் 18.3 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருந்தது. கடந்த அரையாண்டிலிருந்து 3.8 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 80% அளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தொடக்கநிலை நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகள் குறைந்ததற்கு காரணமாக பல்வேறு காரணிகள் கூறப்படுகின்றன. அதிகரித்துள்ள மூலதனம், அதிகமான வட்டி விகிதம், தொழில்நுட்பங்களுக்கான பங்குகளின் விலை குறைந்தது போன்ற பல்வேறு காரணிகள் முதலீட்டாளர்களை ஆட்டிப்படைத்து விடுகின்றன. மேலும் 100 யூனிகார்ன் நிறுவனங்களை வைத்து தயாரித்த அறிக்கையில் எதிர்வரும் காலங்களில் 20% மேற்பட்ட நிறுவனங்கள் மிகப்பெரும் சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும் என தெரியவந்துள்ளது.