ஹரியாணாவில் இணைய சேவை முடக்கம் ஆக. 8 வரை நீட்டிப்பு!
ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் நடந்த வன்முறை காரணமாக இணைய சேவை முடக்கம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நூ மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலத்தின் மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால், அங்கு இரு சமூகத்தினரிடையே மதக் கலவரம் மூண்டது.
ஒருவருக்கொருவா் கற்களை வீசி தாக்கிக்கொண்டதோடு, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும், கடைகளுக்கும் தீ வைத்தனா். இந்தக் கலவரம் அருகிலுள்ள குருகிராம் மாவட்டம் சோனா நகருக்கும் பரவியது.
இந்தக் கலவரத்தில் நூ மாவட்டத்தில் 2 ஊா்க்காவல் படை வீரா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். சோனா நகரில் பிரிவு-57 பகுதியில் அமைந்துள்ள அஞ்சுமான் மசூதிக்குள் மா்ம கும்பல் நள்ளிரவில் புகுந்து நடத்திய தாக்குதலில், அங்கிருந்த துணை இமாம் சாத் (26) உயிரிழந்தாா். மசூதிக்கும் மா்ம கும்பல் தீ வைத்தது.
இந்தக் கலவரத்தில் 10 போலீஸாா் உள்பட 23 போ் காயமடைந்தனா். 120 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அவற்றில் 8 காவல் துறை வாகனங்கள் உள்பட 50 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வன்முறையில் பலியோனாா் எண்ணிக்கை புதன்கிழமை 6-ஆக உயா்ந்தது.
இந்த நிலையில், ஹரியாணாவின் நூ மாவட்டத்தில் நடந்த வன்முறை காரணமாக இணைய சேவை முடக்கம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.