தியாகி திலீபன் சுகதேகியாக இருந்தே தமிழ் மண்ணுக்காக வீரச்சாவடைந்தார் : சிவஞானம் பதிலடி
“பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன கூறுவதுபோல் தியாக தீபம் திலீபன் நோயாளியாக எப்போதுமே இருக்கவில்லை. உண்ணாவிரதம் இருப்பதற்கு முதல் நாள் கூட அவரை நான் சந்தித்துப் பேசினேன். அவர் சுகதேகியாக இருந்தே தமிழ் மண்ணுக்காக வீரச்சாவடைந்தார்.”
– இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் (இராசையா பார்த்திபன்) 23 வயதில் -1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி நல்லூர் முன்றலில் 12 நாட்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் உயிர்நீத்தார்.
ஆனால், திலீபன் உண்ணாவிரதத்தால் மரணமடையவில்லை என்றும், நோயின் காரணமாகவே மரணமடைந்தார் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன நேற்று (12) தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் இன்று (13) யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சி.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கருத்து ஓர் ஆச்சரியமான கருத்து. திலீபன் போராட்ட வேள்வியிலே ஆகுதியாகி 33 வருடங்களுக்குப் பிறகு, கமல் குணரத்ன பெரிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தது போல் சொல்லியிருப்பது ஆச்சரியமானது.
துரதிஷ்டவசமாக எங்கள் மத்தியிலும், திலீபனைத் தெரியாதவர்கள், அவருடைய வாழ்க்கை வரலாற்றை நேரடியாகத் தெரியாதவர்கள் பல கருத்துக்களைச் சொல்லுவதை துன்பியலாகவே நான் பார்க்கின்றேன்.
1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி பிரச்சினைகள் தீவிரமடைந்த நாளில் காலையில் சென்று இலங்கைக்கான அப்போதைய இந்தியத் தூதுவர் திக்சிட்டை சந்தித்த பிறகு யாழ். தேவியிலே வந்து என்னுடைய நண்பனாக இருக்கக் கூடிய சிவசுப்ரமணியத்தை அழைத்துக்கொண்டு திலீபனது அலுவலகத்துக்குச் சென்று அவருடன் நள்ளிரவு வரை பேசியவன் நான்.
திலீபன் மிகத் தெளிவான சுகதேகியாக இருந்தார். தன்னுடைய தீர்மானத்திலே மிகத் தெளிவானவனாக இருந்தார்.
இந்த உண்ணாவிரதம் தொடர்பாக இன்னும் பேசலாம் என்ற போது, இல்லை நான் தெளிவாக இருக்கின்றேன் என்று சொல்லி அடுத்தநாள் உண்ணாவிரதத்தை அவர் ஆரம்பித்தார்.
திலீபன் நோயாளியாக எப்போதுமே இருக்கவில்லை. ஏன் என்றால் அவருடைய அரசியல் செயற்பாடு முழுமையாக ஓர் அளவுக்கு எனக்குத் தெரிந்திருந்தது.
அவர் மக்களோடு பழகிய விதம் தெரிந்திருந்தது. ஆகவே, நோய்வாய்பட்ட அவரைத் தமிழீழத் தேசியத் தலைவர் உண்ணாவிரம் இருக்கச் சொன்னார் என்று சொல்வது தவறானது.
இயக்க வரலாற்றிலே, விடுதலை வேள்வியிலே ஆகுதியாக ஆயத்தமாக இருக்கின்ற எத்தனையோ பேரிலே திலீபனும் ஒருவராக இருந்தார்.
ஆகவேதான் அவர் தெரிவுசெய்யப்பட்டார். அவர் நோய்வாய்பட்டதாலேதான் தலைவர் தெரிவு செய்தார் என்று அர்த்தமில்லை.
கமல் குணரத்ன போன்ற பொறுப்பான பதவிகளிலே இருப்பவர்கள் 33 வருடங்களுக்குப் பிறகு இப்படியான ஓர் கருத்தைச் சொல்வது மிகவும் கவலைக்குரியது.
அவருடைய தரத்துக்கும், அவர் இருக்கின்ற நிலைக்கும் இவ்வாறாகப் பேசுவது பொதுத்தமில்லை” – என்றார்.