13 தேவையில்லை.. தமிழ் தேசத்தை அமைப்பதே ஒரே தீர்வு… ஜனாதிபதிக்கு கஜேந்திரகுமார் கடிதம்!
வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் 13வது அரசியலமைப்புத் திருத்தம் ஒரு ஆரம்பப் புள்ளியாக இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ( TNPF ) ஜனாதிபதிக்கு நேற்று (9) கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர, தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வத்துரை கஜேந்திரன் ஆகியோரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
13ஆவது திருத்தத்தை இனப்பிரச்சினைக்கான ஆரம்பப் புள்ளியாகவோ இறுதித் தீர்வாகவோ ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் 1987ஆம் ஆண்டு தமிழ்க் கட்சிகளால் 13ஆவது திருத்தம் நிராகரிக்கப்பட்டது என்றும், 75 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தப் பிரச்சினைக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களையும் ஒன்றிணைத்து இறைமை மற்றும் சுயாட்சியுடன் கூடிய ஒரே கட்டமைப்பில் நிர்ணயம் செய்யும் உரிமை பாதுகாக்கப்படுவது மாத்திரமே தீர்வாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2016ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து வடக்கு கிழக்குப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ் தேசம் எனும் சமரசப் பிரேரணையே ஒரேயொரு சிறந்த நடவடிக்கை என சுட்டிக்காட்டியதோடு அதற்கான சமரசப் பிரதியும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது.