அதிகரிக்கும் ஆன்லைன் டேட்டிங் ஆப் மோசடி…எச்சரிக்கும் அரசு!
சமீபகாலமாக ஆன்லைன் டேட்டிங் தளங்களில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. என்னது டேட்டிங் தளம் மட்டுமா என்று ஆச்சரியப்பட வேண்டாம். திருமணத்திற்கு வரண் தேடும் தளங்களும் இந்த மோசடிகளுக்கு ஆதரவாக இருப்பது தான் வேடிக்கை. பணத்தை செலுத்தினால், அனைத்து தகவல்களையும் வழங்கும் மேட்ரிமோனி தளங்கள் டேட்டிங் தளங்களுக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை. இதனால் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட மூன்றில் இரண்டு பங்கு (66%) நபர்கள் ஆன்லைன் டேட்டிங் / காதல் மோசடிக்கு இரையாகி உள்ளனர் என அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் சராசரியாக ரூ. 7,966 இழந்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. திருமணம், காதல், பரிசுகள் என பல ரகங்களில் நடைபெறும் இந்த மோசடி தொடர்பாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையத்தில் தொடர்பு கொள்ளும் நபர்களுடன் எப்போதும் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
“மக்களே ஜாக்கிரதை! தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் சுங்க வரி செலுத்தக் கோரும் மோசடியான அழைப்புகள், மின்னஞ்சல்கள், செய்திகள், சமூக வலைத்தள பதிவுகளுக்கு இரையாகிவிடாதீர்கள்” என்று தங்களின் பிரத்யேக X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மக்கள் ஆன்லைனில் பழகிய ஒருவருடன் காதல் அல்லது நட்பு வலையில் சிக்கி ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்த நிகழ்வுகள் இந்தியாவில் அதிகம் உள்ளன. அனைத்து இந்திய சுங்க ஆவண அடையாள எண் (DIN) உள்ளது. இது www.cbic.gov.in இல் சரிபார்க்கப்படும் தனித்துவமான எண் ஆகும். சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மோசடி செய்பவர்கள்களிடம் கவனமுடன் இருக்க வேண்டும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகமும் X தள பதிவு வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த பதிவில், “தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சுங்க வரி செலுத்துவதற்காக ஒருபோதும் சுங்கத்துறை அழைக்கவோ அல்லது குறுந்தகவல் அனுப்பவோ செய்யாது. இந்திய சுங்கத்துறையின் அனைத்து தகவல்தொடர்புகளும் ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை இணையதளத்தில் சரிபார்க்கக்கூடிய DIN எண்ணைக் கொண்டிருக்கும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 லட்சம் ரூபாயை பறித்த ’பேஸ்புக் நண்பர்’
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்புக்கில் நட்பாக பழகிய நபரிடம் 8 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 39 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணிடம் பரிசுபொருள் தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
அந்த பெண்ணிடம் பேஸ்புக்கில் தான் இங்கிலாந்தில் இருந்து பேசுவதாக நட்பாக பழகிய நபர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பரிசளிக்க விருப்புவதாக தெரிவித்துள்ளார். அதற்கு அந்த பெண் பலமுறை மருப்பு தெரிவித்த நிலையில் முகவரியை பகிருமாரு அந்த நபர் வலியுறுத்தியுள்ளார்.
முகவரியை பகிர்ந்த அடுத்த சில மணி நேரத்திலே வேறு ஒரு நபரிடமிருந்து பெண்ணுக்கு ஒரு அழைப்பு வந்ததுள்ளது. அதாவது, இவருக்கு வந்த பரிசு சுங்கத்துறையில் சிக்கியிருப்பதாகவும், அதைப் பெற குறிப்பிட்ட கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறினார். இதனை நம்பி 8 லட்சம் ரூபாய் வரை அவர் ஏமாற்றப்பட்டுள்ளார். விலை உயர்ந்த பொருள்களை பெற சில லட்சங்கள் செலுத்த வேண்டும் என்பது தான் இந்த மோசடியின் சாராம்சம். எனவே எப்போது விழிப்புடன் இருப்பது நல்லது!