1 லட்சம் கி.மீ… 92 நாடுகள்… சைக்கிளில் பயணம் செய்யும் மருத்துவர்…!
மனதில் உறுதி இருந்தால் எந்த சவாலையும் எளிதில் சமாளித்துவிடலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் வாழ்ந்து வருகிறார் ஹரியானாவைச் சேர்ந்த டாக்டர் ராஜ் பாண்டன். சைக்கிள் பாபா என்று அனைவராலும் அறியப்பட்ட இவர், 2030-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் பயணம் செய்ய இலக்கு நிர்ணயித்து மற்றவர்களுக்கு சிறந்த முன் உதாரணமாக விளங்குகிறார்.
உலக நாடுகளுக்கு சைக்கிள் பயணம் செய்யும் டாக்டர் ராஜ்:
உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது. இதுகுறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது பயணத்தை நடத்தி வருகிறார் டாக்டர் ராஜ் பாண்டன். கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹரியானாவின் பதேஹாபாத்தில் இருந்து “பசுமைக்கான சக்கரங்கள்“ என்ற கொள்கையுடன் தனது முதல் சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார். இதுவரை இந்தியா, இலங்கை, மேற்கு வங்காளம், பூடான், மியான்மர், வியட்நாம், கம்போடியா, நேபாளம், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, லாவோஸ், இந்தோனேசியா, தைவான், ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், சீனா, ஓமன், ஈரான் போன்ற நாடுகள் என மொத்தம் ஒரு லட்சம் கிலோமீட்டர்களைக் கடந்துள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் சுற்றுச்சூழல் குறித்த நேர்மறையான செய்தியைக் கொடுக்க விரும்புவதாகவும், இதனால் தான் இந்த பயணத்தை மேற்கொள்வதாகவும் ராஜ் கூறினார். உலகம் முழுவதும் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து இயற்கையைப் பாதுகாக்க செயல்பட வேண்டும் என்றும் இந்த சைக்கிள் பயணம் நிச்சயம் உதவும் என நம்புவதாக கூறுகிறார். சமீபத்தில் ஸ்பெயினில் இருந்த அவருக்கு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக இந்தியா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிக்கைகளின்படி, மருத்துவர் ராஜ் தன்னுடைய பயணத்திற்காகப் பயன்படுத்தும் சைக்கிளின் விலை ரூ. 2 லட்சம் இப்போது, புதிய சைக்கிள் வாங்கும் எண்ணத்தில் இருக்கும் நிலையில், இதன் விலை சுமார் ரூ.5 லட்சம் என்கிறார் மருத்துவர் ராஜ். இவர் ஒவ்வொரு நாடுகளுக்கும் பயணம் செய்யும் போது, அங்குள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெற்றுக்கொள்வாராம்.
சைக்கிள் பாபா என பெயர் வரக்காரணம்?
பல்வேறு உலக நாடுகளுக்குப் பயணம் செய்த இவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் சென்றார். “ஒரு துறவி போல் உலகம் முழுவதும் சுற்றி வருவதால் இவருக்கு சைக்கிள் பாபா“ என்று அங்கு பெயர் வைத்ததாகக் கூறுகிறார். இதற்குப் பிறகு தான் தனது சமூக ஊடகங்களில் உள்ள பெயர் அனைத்தையும் சைக்கிள் பாபா என மாற்றம் செய்துள்ளார்.
தன்னுடைய தன்னம்பிக்கையினால் உலகம் முழுவதும் பயணிக்கும் ராஜ், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடைபயிற்சி, சைக்கிள், ரயில் போன்ற உங்களுக்குப் பிடித்த பயணங்களை மேற்கொள்ளுங்கள் என்கிறார். இந்த பயணத்தின் மூலம் நீங்கள் அங்குள்ள கலாச்சாரம் மற்றும் அங்குள்ள காலநிலை மாற்றங்கள், பழக்க வழக்கங்களை உங்களால் அறிந்துக் கொள்ள முடியும் என்கிறார்.