வெளிநாடுகளில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்திய குடியுரிமையை துறந்துவிட்டு வெளிநாடுகளில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இதன் பின்னணி காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஐந்தரை ஆண்டுகளில், ஜனவரி 2018 முதல் ஜூன் 2023 வரை, ஏறக்குறைய 8.40 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்து, பல்வேறு வெளிநாடுகளில் குடியுரிமையை பெற்றுள்ளார்கள். நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் இந்த எண்ணிக்கை 87,026 ஆக உள்ளது.
2022 ஆம் ஆண்டில், இந்தியக் குடியுரிமையைத் துறந்தவர்களின் எண்ணிக்கை 2,25,620 -ஐ எட்டியது, இது கடந்த 12 ஆண்டுகளில் மிக அதிகமான எண்ணிக்கையாகும். வெளிநாடுகளில் குடியுரிமையை பெறும் இந்தியர்களின் முதன்மை தேர்வாக அமெரிக்கா உள்ளது. இதைத் தொடர்ந்து, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் நாடுகள் உள்ளன.
கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 3.29 லட்சம் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றனர். கனடா 1.62 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியா 1.32 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமையை கொடுத்துள்ளது.
வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,865 இந்தியர்களும், கத்தார் 384, குவைத் 295, பஹ்ரைன் 275 மற்றும் ஓமனில் 174 இந்தியர்களும் குடியுரிமை பெற்றுள்ளார்கள். ஆச்சர்ய அளிக்கும் விதமாக 2,442 இந்தியர்களில் சீனாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.
பொருளாதார, ராணுவ சக்தியாக இந்தியா வளர்ந்துள்ள சூழலில் எதற்காக இந்தியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற ஆர்வம் காட்டுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியர்களின் இடம்பெயர்வுக்கு தொழில் வாய்ப்புகள், மேம்பட்ட வாழ்க்கைத் தரம், கல்வி வாய்ப்புகள், சுகாதாரம், தூய்மையான காற்றும் கூட காரணமாக கூறப்படுகிறது. சிலர் திருமணம் காரணங்களால் வெளிநாடுகளில் செட்டில் ஆகி விடுகிறார்கள்.
சில நாடுகளைப் போல் இல்லாமல், இந்தியா இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதில்லை. இதன் விளைவாக, வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெறும் எந்தவொரு இந்திய குடிமக்களும் தங்கள் இந்தியக் குடியுரிமையை முறையாக திரும்பி ஒப்படைக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்தவர்களில் பெரும்பாலானோர் அதிகம் படித்தவர்கள். உலகின் பல முன்னணி நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள்தான் இருக்கின்றனர். பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அரசியல் ரீதியிலும் சாதித்துள்ளார்கள்.