சமூக வலைத்தளத்தில் தேசிய கொடியை வையுங்கள் – பிரதமர் வேண்டுகோள்!
நாடு முழுவது நாளை 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில், சமூகவலைத்தள முகப்பு படங்களில் தேசிய கொடியை வைக்க பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதந்திர தின விழா நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தியா முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய இடங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிளிர்ந்து கொண்டிருக்கின்றன. மேலும் அணைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் ‘மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ‘வீடுகள் தோறும் தேசிய கொடி’ என்ற இயக்கத்தின் கீழ் 13 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை மக்கள் அவரவர் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், ‘என் மண், என் தேசம்’ என்ற இயக்கத்தின் கீழ், அவரவர் பகுதியில் இந்த தேசத்தின் புனித மண்ணை கையில் ஏந்தியவாறு செல்ஃபி எடுத்து சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படத்தில் தேசிய கொடியை வைத்துள்ளார். ‘வீடுகள் தோறும் தேசிய கொடி’ என்ற திட்டத்தின் கீழ் அனைவரும் தங்களது சமூக வலைதள கணக்குகளின் DP யாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “நமது சமூக வலைதள முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்றி, நமக்கும் நமது நாட்டுக்கும் இடையிலான பிணைப்பை அதிகரிக்கும் இந்த முயற்சிக்கு ஆதரவளிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.