சிம்லாவில் கோயில் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி
கனமழையால் சிம்லாவில் உள்ள சிவன் கோயில் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியானார்கள்.
ஹிமாசல பிரதேச மாநிலம், தலைநகர் சிம்லாவில் உள்ள சம்மர் மலையில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் கனமழையால் இந்த கோயில் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியானார்கள். 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தின்போது கோயிலில் சுமார் 25-30 பேர் வரை இருந்துள்ளனர். மாநிலத்தில் கடந்த 24 மணிநேரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஜடோன் கிராமத்தில் பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு சம்பவத்தால் 5 பேர் பலியானார்கள். மேலும் 3 பேரை காணவில்லை. இதனிடையே தொடர் மழை காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி(இன்று) திட்டமிடப்பட்ட அனைத்து முதுகலை வகுப்புகளின் அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்து மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் முதல்வரின் உத்தரவின் பேரில், ஆகஸ்ட் 14ம் தேதி அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க கல்வித்துறை செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.