ஆகஸ்ட் 25 முதல் மாநிலம் முழுவதும் காலை உணவுத் திட்டம்
77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் கொடியேற்றினார். விழாவில் பேசிய முதலமைச்சர், “ அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில், கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் இளம் பெண்களுக்கு 100 கோடி ரூபாய் உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், சுமார் 2 லட்சத்து பதினோராயிரம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு சுமார் 350 கோடி ரூபாய் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
வரும் கல்வி ஆண்டு முதல், 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் மாநில முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தை மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைக்க இருக்கிறார். இதற்கென இந்த நிதி ஆண்டில் 404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திட்டம் கடத்தாண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.