அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு சிநேக பூர்வமான கலந்துரையாடல்
அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் க.புஸ்பராஜா ஆகியோரை சந்தித்து சிநேக பூர்வமான கலந்துரையாடலொன்றை நேற்று மேற்கொண்டது.
அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்திலும் அதுபோல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்புக்களில் அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் செயலாளர் உள்ளிட்ட அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
அம்பாரை மாவட்டத்தில் தேர்தல் களத்தில் களமிறங்கவுள்ள அனைத்து தமிழ்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியினை அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றது.
இதன் ஒரு கட்டமாகவே இச்சந்திப்பினையும் மேற்கொண்டது.
சிநேக பூர்வமாக இடம்பெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் த.கலையரசன் அவர்களுக்கு அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு சார்பான வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு மேற்கொண்டுவருகின்ற முயற்சிகள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு மேற்கொண்டுள்ள முயற்சியை வரவேற்பதாகவும் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொள்வது பொருத்தமானது எனவும் கூறினார்.
மேலும் தனது அரசியல் பயணம் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும் என்றும் தமது கட்சியின் தலைமைத்துவத்திடம் இது தொடர்பாக கலந்துரையாடுவதுடன் அவர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.
இதேநேரம் கருத்து தெரிவித்த மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் க.புஸ்பராஜா முன்னெடுக்கப்படும் முயற்சியை பாராட்டியதுடன் தனது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் கூறினார்.
மேலும் அம்பாரை மாவட்டத்தின் பல்வேறுபட்ட தகவல்களை புள்ளிவிபரங்களுடன் முன்வைத்ததுடன் கடந்த காலத்தில் மாவட்டத்தின் இருப்பினை பாதுகாப்பதற்கு தான் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பிலும் ஆவணங்களுடன் விளக்கினார்.
– Sathasivam Nirojan