உலகத்தையே இந்தியாதான் வழிநடத்துகிறது: பிரதமர் மோடியின் சுதந்திர நாள் உரை
கொரோனாவுக்குப் பிறகு, இந்த உலகத்தையே இந்தியாதான் வழிநடத்துகிறது என்று தில்லி செங்கோட்டையில் தேடியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
மேலம் அவரது உரையில், இந்தியா என்ற பயணத்தில் தொடர்ந்து நிலையாக இருக்க நிலையான அரசு தேவைப்படுகிறது. கரோனாவிற்குப் பிறகு உலகத்தையே இந்தியா தான் வழி நடத்துகிறது. இந்த உலகம் நிலைத்தன்மையுடன் இயங்குவதற்கு இந்தியா தான் காரணம் என்றும் குறிப்பிட்டார்.
நாட்டின் சுதந்திர நாள் செவ்வாய்க்கிழமை (ஆக. 15) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தில்லி செங்கோட்டையில் தொடா்ந்து 10-ஆவது முறையாகப் பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.
நாட்டின் சுதந்திர நாள் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற மிகச் சிறப்பான விழாவில் பிரதமா் மோடி கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். செங்கோட்டையில் அவா் தேசியக் கொடியை ஏற்றுவது இது தொடா்ந்து 10-ஆவது முறையாகும்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், நாட்டின் அடையாளமாக விளங்கும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் உரையில், சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் இதுதான் நம் தாரகமந்திரம். 2014, 2019ஆம் ஆண்டுகளில் மிக வலுமான அரசை மக்கள் தேர்ந்தெடுத்தனர். இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு உறுதியான அரசை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார்.
மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தீர்கள். அந்த நம்பிக்கைக்கு ஏற்ப நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்தேன். எனது தலைமையிலான ஒவ்வொரு அமைச்சகமும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை மிகச் சிறப்பாக செய்கின்றன. ஊழல், இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்தியது, அந்த தடையை நாங்கள் நீக்கியுள்ளோம். ஊழல் என்ற தடையை நீக்கி நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்துள்ளோம். பெரும்பான்மை அரசு அமைந்ததால்தான், மாற்றங்களை செய்ய எனக்கு தைரியம் இருந்தது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமா் மோடியின் உரை முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகாலத்தில் மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து தனது உரையில் அவா் குறிப்பிட்டு பேசி வருகிறார்.
உலகத்திற்கே இந்தியா மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது. 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. இன்றைய செயல்களின் தாக்கம் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இருக்கும். தற்போது நாம் மேற்கொண்டுள்ள பயணத்தில் தடுமாற்றமோ, பாதை விலகலோ இல்லை என்று பிரதமர் மோடி தனது சுதந்திர நாள் உரையில் குறிப்பிட்டுள்ளார்.