குருந்தூர்மலையில் 18ஆம் திகதி பொங்கல் விழா! – அனைத்து மக்களுக்கும் அழைப்பு.

“முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொங்கல் விழா நடத்தப்படவுள்ளது. அனைத்து மக்களும் அணிதிரண்டு வந்து பொங்கல் விழாவில் கலந்துகொள்ள வேண்டும். எமது உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் அணிதிரள வேண்டும்.”
இவ்வாறு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தி இந்த அழைப்பை அவர்கள் விடுத்துள்ளனர்.
குறித்த ஊடக சந்திப்பில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பரிபாலன சபை தலைவர் து.விக்னேஸ்வரன், ஆலய நிர்வாக சபை உறுப்பினர் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்
இந்த விடயமானது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், தொல்லியல் திணைக்களம் சைவ வழிபாடுகளை மேற்கொள்தற்கு எந்தத் தடையுமில்லை எனத் தெரிவித்திருந்தது. அதற்கமைய இந்தப் பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன.
எனவே, அனைவரும் இந்தப் பொங்கல் விழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.