13யை சிதைக்க திட்டமிடும் காக்கை கூட்டம்!

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சியை தோற்கடிக்க பசில் ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவுக்குள் ஏற்பட்டுள்ள இரு கருத்துகளைக் கொண்ட பிரிவு அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளை கடுமையாக பாதித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிப்படையாகவே இரு பிரிவினர் போன்று நடந்து கொள்ளும் அரசாங்கத்தில் இரண்டு குழுக்களுக்குள் உருவாகியுள்ள இந்த முறுகலில் , 13ஐ அமுல்படுத்த எடுக்கும் முயற்சியை எப்படியாவது எதிர்க்க வேண்டும் எனும் தரப்பிலான பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் விரைவில் ஜனாதிபதியிடம் தமது கருத்தை வெளிப்படுத்தவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டை கூட்டுவதற்கு முன்னர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் கூடி அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் தமக்குள் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தக் குழுவில் ராஜபக்ச குடும்பமும் இருப்பதால், அவர்கள் மீதான தற்போதைய அதிருப்தியை களைந்து, எதிர்வரும் தேர்தலில் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற , 13 யை எதிர்ப்பது அவர்களுக்கு பெரும் அரசியல் சாதகமாக அமையும் என, அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், 13வது அரசியலமைப்புத் திருத்தம் அமுல்படுத்தப்படுவதால், ஜனாதிபதி மீது வடக்கு, கிழக்கு மக்கள் இடையே உருவாகக் கூடிய நம்பிக்கையை தடுப்பதும் இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாக உள்ளது என அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.