நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகள் இயக்க மத்திய அரசு ஒப்புதல்!
நாடு முழுவதும் 169 நகரங்களில் 10 ஆயிரம் மின்சார பேருந்துகளை இயக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், 57,613 கோடி ரூபாய் மதிப்பில், ‘PM-eBus Sewa’ என்ற மின்சார பேருந்து திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக 20 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும் நிலையில், மாநில அரசு மற்றும் தனியாரின் கூட்டு பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டமானது பத்தாண்டுகளில் செயல்படுத்தப்படும். 3 லட்சத்திற்கும் மேல் மக்கள்தொகை கொண்ட நகரங்கள், யூனியன் பிரதேச தலைநகரங்கள், வடகிழக்கு மாநில தலைநகரங்கள் மற்றும் மலையை ஒட்டிய மாநிலங்களின் தலைநகரங்கள் என 169 நகரங்களில் பத்தாயிரம் மின்சார பேருந்துகள் வலம் வரவுள்ளன. முறையான போக்குவரத்து கட்டமைப்பு இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியிலேயே பணிமனைகளை மேம்படுத்தவும், பவர் ஸ்டேஷன்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. BYTE PM-eBus Sewa திட்டத்தின் மூலம், நேரடியாக 55 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 181 நகரங்களில் பசுமை நகர்ப்புற இயக்கம் திட்டத்தின் மூலம் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, மெட்ரோ ரயிலில் உள்ளதைப் போன்று தானியங்கி கட்டணம் செலுத்தும் முறை மற்றும் பேருந்து, ரயில் போக்குவரத்தை ஒருங்கிணைத்து பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கான திட்டம் போன்றவை செயல்படுத்தப்படவுள்ளன.
மேலும், 7 முக்கிய ரயில்வே திட்டங்களுக்கும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள ரயில் பாதையுடன், மேலும் 2 ஆயிரத்து 339 கிலோ மீட்டர் ரயில் பாதை செயல்படுத்தப்படும். உத்தரபிரதேசம், பிகார், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், குஜராத், ஒடிஷா, மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட 9 மாநிலங்களின் 35 மாவட்டகளில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். இதற்காக 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 30 லட்சம் பாரம்பரிய கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் 13 ஆயிரம் கோடி மதிப்பிலான பிரதமர் விஸ்வகர்மா திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தனது சுதந்திர தின உரையில் இந்தத் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், கைவினைஞர்களுக்கு முதல் தவணையாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாவது தவணையாக 2 லட்சம் ரூபாயும் மானியத்துடன் கூடிய கடனாக வழங்கப்படும்.
14,903 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நீட்டிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ் 5.25 லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். NCM என்றழைக்கப்படும், தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் திட்டத்தில் மேலும் ஒன்பது சூப்பர் கம்ப்யூட்டர்களை சேர்க்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.