நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம்: ராகுல் கொடுத்த பதிலடி

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றி, பிரதமர் நினைவு அருங்காட்சியகம் என சூட்டப்பட்டிருப்பது குறித்து பேசிய ராகுல், நேரு அவரது சிறப்பான பணியால் நினைவுகூரப்படுகிறாரே தவிர, வெறும் பெயரால் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார்.
லடாக் செல்லும் வழியில், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம், நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, நேரு அவர்கள் அவர் செய்த சிறப்பான பணிகளால்தான் நினைவுகூரப்படுகிறாரே தவிர, வெறும் அவரது பெயரால் அல்ல என்று கூறினார்.
தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம், பிரதமர் நினைவு அருங்காட்சியகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தில்லியின் தீன் மூர்த்தி பவன் கட்டடத்தில் இயங்கி வரும் இந்த அருங்காட்சியகக் கட்டடத்தில்தான் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாகர்லால் நேரு தங்கியிருந்தார்.
அவரது மறைவுக்குப் பிறகு அந்தக் கட்டடத்தில் நூலகமும், இந்திய விடுதலைப் போராட்டம் மற்றும் இந்திய வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பை உணர்த்தும் வகையில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டது. இதனை பிரதமர் நினைவு அருங்காட்சியகம் என மத்திய அரசு மாற்றி, அது ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஜவாகர்லால் நேருவின் மகத்தான பங்களிப்பை பிரதமர் மோடி ஒருபோதும் பறிக்க முடியாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.