இறுதிக்கட்டத்தை நெருங்கும் சந்திரயான்-3 திட்டம்
சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டரை பிரித்து நிலவில் தரையிறக்குவதற்கான மிகவும் சவாலான தொழில்நுட்ப செயல்பாட்டை இஸ்ரோ இன்று மதியம் மேற்கொள்கிறது.
சந்திரயான் -3 விண்கலனுக்கு விக்ரம் லேண்டர் இன்றைய தினம் குட்பை சொல்லும் என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்கு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கிட்டத்தட்ட கிளைமாக்ஸை நெருங்கி கொண்டிருக்கிறது. நிலவின் புவிவட்ட சுற்றுப்பாதையில் உலாவி வரும் சந்திரயான் விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி இன்று மதியம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், தன்னைத் தானே செல்ஃபி எடுத்து பூமிக்கு அனுப்பும் என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உந்து கலனில் இருந்து விக்ரம் லேண்டரை பிரித்த பிறகே, சந்திரயான்-3 திட்டத்தின் அதி முக்கிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். மேலும், சந்திரயான் -3 திட்டமிட்டப்படி செல்லும் நிலையில், ஆகஸ்ட் 23 ஆம் தேதி இந்தியா முழுவதும் உற்சாகம் அடையும் என்று மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.