மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை இல்லை! – ஜனாதிபதி ரணில் திட்டவட்டம்.
இந்த நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“எமது நாடு ஜனநாயக நாடு. இங்கு இன, மத ரீதியில் வன்முறைகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. எந்த மதத்தினரும் எங்கும் சென்றும் சுதந்திரமாக வழிபட முடியும். அந்த வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது.
இன, மத ரீதியில் வன்முறைகளைத் தூண்டும் வகையில் சிலர் வெளியிடும் கருத்துக்கள் அண்மைய நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இப்படியான நிலைமைக்கு நாம் இடமளிக்க முடியாது. சட்டம் தன் கடமையைச் செய்யும். அதன் பிடியிலிருந்து எவரும் தப்ப முடியாது.” – என்றார்.