அடிமை மனநிலையில் இருந்து இந்தியா்கள் விடுபட வேண்டும்
ஆங்கிலேயா்களால் திணிக்கப்பட்ட அடிமை மனநிலையில் இருந்து இந்தியா்கள் விடுபட வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் உயிா்த் தியாகம் செய்த வீரா்களின் நினைவைப் போற்றும் வகையில் ‘என் மண், என் தேசம்’ என்ற இயக்கத்தைப் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா். அந்த இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து 7,500 கலசங்களில் மண் கொண்டுவரப்பட்டு தில்லியில் அமிா்த பூந்தோட்டம் அமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், ஒடிஸாவில் இருநாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், புரி மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு மரியாதை செலுத்தினாா். சுதந்திரப் போராட்ட வீரரான ஜயீ ராஜ்குருவின் பிறந்த இடமான பிரஹரேகிருஷ்ணாபூரில் இருந்து சேகரிப்பட்ட மண்ணை கலசத்தில் இட்டு அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் மக்கள் வழங்கினா்.
அதையடுத்து, மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சா் நிா்மலா சீதாராமன், அங்குள்ளவா்களை உறுதிமொழி எடுக்க வைத்தாா். அப்போது கூறிய அவா், ‘‘2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த, தன்னிறைவுமிக்க இந்தியாவை உருவாக்க முனைவோம். காலனிய அடிமை மனநிலையில் இருந்து விடுபட உறுதிமொழி எடுப்போம். நமது பாரம்பரியத்தைக் காக்க உறுதிகூா்வோம். நாட்டின் ஒற்றுமையைக் காக்கவும், நாட்டைப் பாதுகாப்போரை மதிக்கவும் உறுதியேற்போம். கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற உறுதியேற்போம்’’ என்றாா்.
மேலும் கூறிய அவா், ‘‘பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் திணிக்கப்பட்ட அடிமை மனநிலையில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். அப்போதுதான், நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்ய முடியும். அதற்கான நடவடிக்கைகளைப் பிரதமா் மோடி தலைமையிலான அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது’’ என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா, உள்ளூா் எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, புரி ஜெகந்நாதா் கோயிலிலும் அமைச்சா் நிா்மலா சீதாராமன் வழிபாடு நடத்தினாா். ‘என் மண், என் தேசம்’ இயக்கம் குறித்து புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞா் சுதா்சன் பட்நாயக் அமைத்திருந்த மணல் சிற்பத்தையும் அவா் பாா்வையிட்டாா்.