குருந்தூர் மலை பொங்கல் விழா; 5 பஸ்களில் நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் – நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில்…..
குருந்தூர் மலையில் இன்று (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து 5 பஸ்களில் நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையிலே வழிபாடுகளில், ஈடுபட்டு வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்திலே இன்றையதினம் பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அடிப்படையில் 03 பஸ்கள் மற்றும் 02 ஹன்ரர்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளுக்காக கொண்டு வரப்பட்டிருக்கின்றார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையிலே தமிழ் மக்கள் பொங்கல் நிகழ்வுக்காக இன்னும் சற்று நேரத்திலே குறித்த பகுதிக்கு வருகை தர இருக்கின்றார்கள். மிகவும் ஒரு அபாயகரமான சூழலிலே பொங்கல் நிகழ்வு எவ்வாறு இடம்பெறவுள்ளது என்ற நிலையில் தற்போது பௌத்த விகாரையிலே பௌத்த மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மதவழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது என பொலிஸாரின் தடையுத்தரவு கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று நிராகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.