மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை… 3 இளைஞர்கள் படுகொலை!
மணிப்பூரில் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க எதிர்ப்பு தெரிவித்து மே 3 ஆம் தேதி குக்கி, நாகாஸ் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணியில் ஏற்பட்ட கலவரம், 3 மாதங்களுக்கு மேலாக மாநிலம் முழுவதும் பற்றி எரிந்து வருகிறது.
குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி இழுத்து சென்ற சம்பவம் நாட்டை உலுக்கியதுடன், நாடாளுமன்றத்தையும் ஆட்டம் காண வைத்தது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மணிப்பூரில் அமைதி திரும்பி வருவதாக, பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பதிலளித்திருந்தார்.அதற்கேற்ப, கடந்த 2 வாரங்களாக மணிப்பூரில் பெரியளவில் எந்த வன்முறைகளும் பதிவாகாமல் இருந்தன.
இந்நிலையில், உக்ருல் நகரத்திலிருந்து சுமார் 47 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குக்கி பழங்குடியின கிராமமான தௌவாய்யில், அதிகாலை 4:30 மணியளவில் திடீரென துப்பாக்கி சண்டை நடைபெற்றது.ஆயுதமேந்திய கும்பல் ஒன்று கிழக்கு மலைப்பகுதியிலிருந்து தௌவாய் குக்கி நோக்கி வந்ததாகவும், அங்கு காவலுக்கு இருந்த இளைஞர்களை நோக்கி சரமாரியாக சுட்டு விட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த போலீசார் சோதனை நடத்திய போது வனப்பகுதியில் 25 முதல் 35 வயது மதிக்கத்தக்க குக்கி இன இளைஞர்கள் 3 பேரின் உடல்களை மீட்டனர். அவர்களின் கைகள் வெட்டப்பட்டு, உடல் எங்கும் வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து, போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி உள்ளனர். மணிப்பூர் கலவரத்தில் மே 3ஆம் தேதி முதல் இதுவரை 190 பேர் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மாதம் 5-ம் தேதி, பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் நடந்த இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 3 மெய்தி மற்றும் 2 குக்கி சமூகத்தினர் கொல்லப்பட்டனர்.
இதனிடையே, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி தலைமையிலான குழு, மணிப்பூர் சென்றது.கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை இக்குழு ஆய்வு செய்ய உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள சுராசந்த்பூா், மொய்ராங், இம்பால் ஆகிய இடங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்கும் செல்ல உள்ளனர். மேலும், மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆளுநா் அனுசுயா உய்கே மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு ஆலோசனை நடத்த உள்ளது.