இனி ‘பல்க்காக’ சிம் கார்டு வாங்கவும் முடியாது… விற்கவும் முடியாது!
இந்தியாவில் இணைய வழி மற்றும் செல்போன்கள் வழியாக நடைபெறும் மோசடிகளும் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. என்னதான் சிம் கார்டை வைத்து குற்றவாளிகளை பிடிக்க முடியுமு் என்றாலும், இப்பொதெல்லாம் சிம் கார்டுகளையே போலியான பெயர் மற்றும் முகவரி கொடுத்து வாங்கி அதன் மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகள் மொத்தமாக சிம் கார்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு அதன் மூலம் தங்கள் மோசடி வேலைகளை செய்து வருகிறார்கள்.
அதை தடுப்பதற்காகத் தான் இப்போது மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
இதற்காக, மத்திய அரசு இப்போது இரண்டு புதிய சீர்திருத்தங்களைக் சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது. சிம் கார்டு வாங்குபவர்கள் வழக்கம் போல அடையாள ஆவணங்களை வழங்கி சிம் கார்டை பெற்றுக்கொள்ளலாம். சிம் டீலர்கள் மற்றும் அவர்களின் விபரங்களை காவல்துறை சரிபார்க்கப்படுவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது என்று மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். சிம் பரிவர்த்தனை நடவடிக்கைகள் தவறான நபர்களின் கைகளில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முக்கிய நடவடிக்கையாக இது இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொலைத்தொடர்பு அமைச்சர் கூறியது போல், மொத்த சிம் விற்பனையையும் அரசு நிறுத்தியுள்ளது. அதாவது, இனி யாரும் இந்தியாவில் பல்க் ஆக சிம் கார்டுகளை வாங்க முடியாது. எனவே இப்போது, மோசடி செய்பவர்கள் குற்றங்களைச் செய்ய மொத்தமாக சிம் கார்டுகளை வாங்க முடியாது. இதன் மூலம் கணிசமான எண்ணிக்கையில் சைபர் கிரைம் குற்றங்கள் குறைக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் நம்புகிறது. வழக்கமான நுகர்வோர் சைபர் கிரைமில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை இந்த இரண்டு சீர்திருத்தங்களும் உறுதி செய்கின்றன.
இந்த சீர்திருத்தங்கள் முற்றிலும் நுகர்வோர் பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றன என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார். இதுவரை, மத்திய அரசின் கட்டுப்பாடுகளை மீறிய 67,000 க்கும் மேற்பட்ட சிம் டீலர்கள் தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 300 எஃப்ஐஆர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், சட்டவிரோதமாக பெறப்பட்ட அல்லது மோசடியாக பெறப்பட்ட 17,000 மொபைல் போன்களையும் இந்திய அரசு முடக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமைச்சரின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை நாட்டில் சைபர் கிரைம்களை கணிசமாக குறைக்க வழிவகுக்கும்.
மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகளால் சைபர் மோசடி செய்பவர்கள், அழுத்தத்தை உணரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சைபர் கிரைம் விழிப்புணர்வு இன்னும் போதிய அளவில் இல்லாத இந்தியா போன்ற நாடுகளில் இத்தகைய நடவடிக்கைகளின் தேவை மிக அதிகமாக உள்ளது. இந்த புதிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மொத்த சிம் இணைப்பு வாங்குவது இனி இந்தியாவில் சாத்தியமில்லை என்றும் மத்திய அரசு திடமாக நம்புகிறது.