லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழப்பு…!
லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
யூனியன் பிரதேசமான லடாக்கின் லே பகுதியில் இருந்து நியோமாவுக்கு ராணுவ வீரர்கள் 10 பேர் ஒரே வாகனத்தில் சென்றனர். அப்போது, கியாரிக்கு அருகே எதிரபாராதவிதமாக அவர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கிற்குள் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் 8 ராணுவ வீரர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, சோகத்தை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்திற்கு தேசம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
ராணுவ வீரர்கள் தேசத்திற்கு ஆற்றிய பங்கு மற்றும் சேவை எப்போதும் நினைவுகூரப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர் விரைவில் குணமடையவும் வேண்டுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.