இளைஞர்களைக் குறிவைத்து 3 இடங்களில் துப்பாக்கிச்சூடு! – ஒருவர் சாவு; இருவர் படுகாயம்.

நாட்டில் மூன்று இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இளைஞர் ஒருவர் சாவடைந்துள்ளார். மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மொனராகலை – வெல்லவாய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞரின் வீட்டுக்கு ஓட்டோவில் சென்ற இனந்தெரியாத மூவர், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞர், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தெஹிவளை ஓபன் பிளேஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
தனது வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் நின்றிருந்தபோது, குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 30 வயதுடைய இளைஞர், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பேராதனை – முரதலாவ பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கண்டி – வட்டுவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.
நீதிமன்றத்தில் பிடியாணை பெற்ற சந்தேகநபரான குறித்த இளைஞரைக் கைது செய்யச் சென்றபோது, இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேகநபருக்கு எதிராக கொள்ளை மற்றும் நீதிமன்றத்தைப் புறக்கணித்தமை தொடர்பில் இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், நேற்று குறித்த சந்தேகநபரை கைதுசெய்வதற்காகச் சென்ற வேளையில் அவர் பொலிஸாரைத் தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளார்.
அதன்போது, பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சந்தேகநபர் கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.