அடாவடித்தனத்துக்கு எதிராக களம் இறங்கிய ஜீவன் : உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம்
மாத்தளை, ரத்வத்தை தோட்டப்பகுதியில் தோட்ட தொழிலாளர் ஒருவரின் தற்காலிக குடியிருப்பை உதவி முகாமையாளர் ஒருவர் அடித்து நொறுக்கும் காட்சி மலையக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலையீட்டின் பேரில் மாத்தளை மாவட்டம் அல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் ரத்வத்த தோட்டத்தில் பணிபுரிந்து வந்த உதவி தோட்ட முகாமையாளரை பணி நீக்கம் செய்ய தோட்ட அதிகார சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
மேலும், உதவி மேலாளரால் இடிக்கப்பட்ட வீட்டிற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு புதிய வீடு கட்டித்தரவும் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நேற்று (20) மாத்தளைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.
சம்பவத்துடன் தொடர்புடைய உதவி முகாமையாளரை அமைச்சர் ஸ்தலத்திற்கு வரவழைத்த போது, நிர்வாகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
அதன்பின், சம்பவத்தில் தொடர்புடைய உதவி மேலாளரை பணி நீக்கம் செய்ய சம்மதித்த நிர்வாகம், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு புதிய வீடு கட்டித்தரவும் ஒப்புக்கொண்டது.
இந்த சம்பவம் தொடர்பாக இடிக்கப்பட்ட வீட்டுக்காரர்களிடம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.